தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து சிறப்பு புலனாய்வு குழுவை விசாரணைக்கு அமைத்தது. இது தொடர்பாக தமிழக அரசு ஏற்கனவே ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்திருந்த நிலையில் மதுரை கிளை நீதிமன்றமும் விசாரித்தது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மீது நம்பிக்கை இல்லை என கூறி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது.

அதன்படி சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்த விசாரணையை மேற்பார்வையிடும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதன் பிறகு மாதந்தோறும் சிபிஐ அறிக்கை தர வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிய நிலையில் கரூர் விவகாரத்தை மக்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்த விவகாரமாக கருதுகிறோம். ஒரு விவகாரத்தில் வெளிப்படையான பாரபட்சமில்லாத விசாரணை நடைபெற வேண்டும் என கேட்பது குடிமக்களின் உரிமை என்று நீதிமன்றம் தெரிவித்தது.

அதன் பிறகு சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக விசாரித்ததற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் அரசியல் பிரச்சாரம் மற்றும் ரோடு ஷோ போன்ற விவகாரங்களில் நெறிமுறைகள் வகுக்க கோரிய மனுவை உயர்நீதிமன்ற முறையாக விசாரிக்கவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ஏற்கனவே தமிழக முதலமைச்சர் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்த நிலையில் எதையுமே ஆய்வு செய்யாமல் தனி நீதிபதி சிறப்பு புலனாய்வு குழுவை விசாரணைக்கு அமைத்தது தவறு என உச்சநீதிமன்றம் கூறியதோடு இது தொடர்பாக விசாரணை நடத்தியது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கொடுக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் தாங்கள் எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை என ஷர்மிளா மற்றும் செல்வராஜ் ஆகியோர் காணொளி மூலம் ஆஜராகி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்த நிலையில் தமிழக அரசு மோசடியாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் கூறியது. மேலும் அதற்கு மனு தாக்கலில் மோசடி நடந்திருந்தால் அதையும் விசாரிக்க செய்தியை விசாரணைக்கு உத்தரவிடுவோம் என உச்சநீதிமன்றம் கூறியது.