தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட மருந்தை உபயோகித்ததால், மத்தியப் பிரதேசத்தில் 23 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு இரு அதிகாரிகளை மட்டும் இடைநீக்கம் செய்து, ‘எனக்கு சம்பந்தமில்லை’ என்று கூறி அரசு மாயை உருவாக்குகிறது. இந்த மருந்து விவகாரத்தில் அரசு நேரடியாக பதில் அளிக்க வேண்டும். குறிப்பாக, முதல்வர் இதுகுறித்து விளக்கம் தர வேண்டும்.
திமுக சாதிக்கு எதிரி என்று சொல்லிக் கொண்டு, அதே நேரத்தில் சாதிப்பெயரை வைத்து அரசியல் செய்கிறது. இது திமுகவின் இரட்டை வேடம். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபின், திருமாவளவனின் எண்ண ஓட்டம் குழப்பத்தில் உள்ளது. திமுகவை தோற்கடிக்க வேண்டுமென்றால், சித்தாந்தத்தை விட்டு கூட்டணி சேரலாம். தலைமை நீதிபதிக்கு எதிரான தாக்குதலை கண்டிக்கும் விசிகவினர், அதே சமயம் வழக்கறிஞரை தாக்குகிறார்கள். கருத்துச் சுதந்திரம் பற்றி திருமாவளவன் பேசுவது பொருத்தமற்றது.
என் கார் மீது நடந்த தாக்குதலுக்குக் கூட நான் காரணம் என திருமாவளவன் கூறுகிறார். இதுவே தமிழக அரசியலுக்கு சாபக்கேடு. பார்த்துமுறைத்தால் நாலு தட்டு தட்டவேண்டும் என திருமாவளவன் கூறுகிறார். அவரை பாகிஸ்தான் பார்டருக்கு அனுப்பனும். அவர்கள் தான் முறைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட தலைவர்கள் தான் அரசியல் செய்கிறார்கள். திருமாவளவன் எக்ஸ் பக்கத்தில் கமெண்ட் செய்ய முடியாது.
தவறு செய்த பின் அதிலிருந்து தப்பிக்க, ‘ஆர்.எஸ்.எஸ்., பாஜக, அண்ணாமலை’ என குற்றம் சாட்டும் பழக்கம் திருமாவளவனுக்கு உள்ளது. எல்லாவற்றுக்கும் பாஜகவை காரணம் காட்டும் அவரின் அரசியல் தற்போது தரம் தாழ்ந்து விட்டது. மேலும் சம்பவத்துக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்ட பின், திருமாவளவன் அரசியலை விட்டு விலகுவாரா?” என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
