வரும் 2027-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் (IPL) கிரிக்கெட் தொடரை வழக்கத்தை விடவும் முன்கூட்டியே, அதாவது மார்ச் மாதம் 10-ஆம் தேதியே தொடங்கப் பிசிசிஐ (BCCI) தீவிரமாக ஆலோசித்து வருவதாக அதிரடி தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக ஐபிஎல் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதி வாரத்தில் தொடங்கி, மே மாத இறுதி வரை நடைபெறுவதுதான் வழக்கம்.

​ஆனால், மே மாதத்தின் பிற்பாதியில் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் மிக உக்கிரமாக இருப்பதாலும், சில இடங்களில் பருவமழை மற்றும் காலநிலை மாற்றங்களால் போட்டிகள் பாதிக்கப்படுவதாலும் இந்த புதிய முடிவை நோக்கி பிசிசிஐ நகர்ந்துள்ளது. இது குறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சய்கியா (Devajit Saikia) செய்தியாளர்களிடம் பேசுகையில், “மே மாத கடுமையான வெயிலில் இருந்து வீரர்களின் உடல்நலன் மற்றும் மைதானத்திற்கு வரும் ரசிகர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வரும் 2027-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரை மார்ச் 10 முதல் மே 15-க்குள் நடத்தி முடிக்கத் திட்டமிட்டு வருகிறோம்.

இதற்காக இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை மார்ச் 10-க்கு முன்பாகவே முடிக்குமாறு கேம் டெவலப்மென்ட் பொது மேலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். போட்டிகளின் எண்ணிக்கை 74 ஆக மட்டுமே தொடரும் என்றும், தேதிகள் மட்டுமே இரண்டு வாரங்கள் முன்கூட்டியே மாற்றியமைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ள இந்த செய்தி தற்பொழுது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்று சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.