இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் விக்கெட் கீப்பரான 32 வயது கேஎஸ் பாரத், இந்திய கிரிக்கெட்டே வேண்டாம் என்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வெறும் 15 நாட்களிலேயே ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) உள்ளூர் தொடரில் விளையாட ஒப்பந்தமாகியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 4-ஆம் தேதி எவ்வித காரணமும் கூறாமல் திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்த அவர், தற்போது அமீரக கிரிக்கெட் வாரியம் நடத்தும் இருநாள் வெள்ளைப்பந்து சாம்பியன்ஷிப் தொடருக்கான ‘ஸ்டாலியன்ஸ்’ அணியில் இணைந்துள்ளார்.
ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கியபோது இந்திய அணியில் இணைந்து 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பாரத், ரஞ்சி கோப்பையில் முச்சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்தவர் ஆவார்.
பொதுவாக ஓய்வுபெறும் இந்திய வீரர்கள் வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் மட்டுமே ஆடுவார்கள் என்ற நிலையில், இவர் யுஏஇ-யின் உள்ளூர் தொடரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
ஐசிசி விதிகளின்படி இவர் உடனடியாக யுஏஇ தேசிய அணியில் விளையாட முடியாது என்றாலும், இவர் இங்கிலாந்துக்கு எதிராகத் தனது கடைசி சர்வதேச போட்டியை 2024 பிப்ரவரியில் விளையாடியதால், 3 ஆண்டுகள் இடைவெளி விதியின்படி வரும் 2027 பிப்ரவரிக்கு மேல் யுஏஇ தேசிய அணிக்கு விளையாடத் தகுதி பெற்றுவிடுவார்.
இவர் அமீரக நாட்டுக்காக விளையாடத் திட்டமிட்டுள்ளாரா அல்லது டி20 லீக் போட்டிகளுக்காக இந்த முடிவை எடுத்துள்ளாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
