ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, அதன் எதிரொலியாக இந்தியாவில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேற வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய அரசு அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

சர்வதேச அளவில் நிலவும் இந்த மோதல் போக்கு, உள்நாட்டிலும் சட்டம்-ஒழுங்கு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மாநில அரசுகள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் ஈரான் ஆதரவு தீவிர மதப் பேச்சாளர்களைக் கண்டறிந்து, அவர்களின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களிடையே மத ரீதியான பிரிவினையை உண்டாக்கும் கருத்துகளைப் பரப்புபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும் மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச அரசியல் சூழலால் நாட்டின் அமைதிக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த சனிக்கிழமை ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்ச தலைவர் காமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார். இதன் காரணமாக மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் நிலவும் நிலையில் தற்போது மத்திய அரசு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.