மகாராட்டிர மாநில முன்னாள் துணை முதலமைச்சர் அஜித் பவார் காலமானதைத் தொடர்ந்து, அவரது மகன் ஜெய பவார் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ மற்றும் குற்றச்சாட்டு அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது தந்தை அஜித் பவாரின் மறைவு குறித்து உருக்கமாகப் பதிவிட்டுள்ள ஜெய பவார், என் தந்தையை நான் இழந்துவிட்டேன்… இந்த வலி என் வாழ்நாள் முழுவதும் என்னுடனேயே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். தனது தந்தையின் மறைவுக்குக் காரணமான விமான விபத்தில் நிகழ்ந்த மனிதத் தவறுகள் மற்றும் தொழில்நுட்பக் குறைபாடுகள் குறித்து அவர் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார்.
View this post on Instagram
தனது பதிவில் ‘விஎஸ்ஆர்’ (VSR) விமான நிறுவனத்தின் உரிமையாளர் ரோஹித் சிங் தொடர்பான ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவை ஜெய பவார் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், விமானம் நடுவானில் பறந்துகொண்டிருக்கும்போது, தலைமை விமானி இருக்கையில் அமர்ந்திருக்கும் ரோஹித் சிங் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இது குறித்து ஜெய பவார் கூறுகையில், “வானில் பறக்கும்போது இவ்வளவு பெரிய அலட்சியம் எப்படி இருக்க முடியும்? இது மிகவும் ஆபத்தானது மற்றும் அதிர்ச்சியளிப்பானது. இத்தகைய பாதுகாப்பு விதிமீறல்களால் பல அப்பாவி உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது,” என்று கொந்தளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உடனடியாகத் தலையிட வேண்டும் என்று ஜெய பவார் வலியுறுத்தியுள்ளார். அவரது கோரிக்கைகள் வருமாறு, விசாரணை முடியும் வரை ‘விஎஸ்ஆர்’ நிறுவனத்தின் அனைத்து விமானங்களையும் உடனடியாகத் தரைையிறக்க வேண்டும்.
விமானி இருக்கையில் தூங்கிய ரோஹித் சிங்கை உடனடியாகக் கைது செய்து, அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
“இது ஒரு மகனின் ஆத்மார்த்தமான கதறல்… என் தந்தைக்காகவும், ஒவ்வொரு பயணியின் பாதுகாப்பிற்காகவும் நான் இதைக் கேட்கிறேன்,” என்ற ஜெய பவாரின் பதிவு இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் ஜெய பவாரின் இந்த போராட்டத்திற்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அஜித் பவாரின் மறைவு மகாராட்டிர அரசியலில் ஒரு பேரிழப்பாகக் கருதப்படும் நிலையில், அவரது மகனின் இந்தப் பகீர் புகார் விமானப் போக்குவரத்துத் துறையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
