தமிழகத்தில் அடுத்த 20 நாட்களுக்குத் தேவையான வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யக் கோரி மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
சர்வதேச அளவில் நிலவி வரும் அசாதாரண சூழல்கள் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், தமிழகத்தின் தற்போதைய எரிவாயு கையிருப்பு நிலை குறித்துத் தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள இல்லத்தரசிகளுக்குத் தங்கு தடையின்றி சமையல் எரிவாயு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அடுத்த 20 நாட்களுக்குத் தேவையான சிலிண்டர்கள் தற்போது கையிருப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் உணவகங்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களுக்கான தேவை கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தேவையைக் கருத்தில் கொண்டு, தட்டுப்பாடின்றி வணிக சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது.
எரிவாயு விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யத் தமிழக அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு ( தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் வீட்டு உபயோகம் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விநியோகம் தங்கு தடையின்றி நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு, போதிய அளவில் எரிவாயு விநியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநிலத்தில் போதிய அளவு கையிருப்பு உள்ளதாலும், விநியோகத்தைச் சீராக வைத்திருக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாலும், பொதுமக்கள் எரிவாயு தட்டுப்பாடு குறித்து அச்சப்படத் தேவையில்லை எனத் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
