நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி அதிமுக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு (அமமுக) ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுகவின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் எம்எல்ஏ-வுமான ரெட்டியார்பட்டி நாராயணன் இன்று கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் (2026) நெருங்கி வரும் சூழலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், நெல்லை மாவட்டத்தின் முக்கியத் தொகுதியான நாங்குநேரி, கூட்டணி கட்சியான அமமுக-வுக்கு ஒதுக்கப்பட்டது. இம்முடிவு, கடந்த முறை இத்தொகுதியில் வெற்றி பெற்ற ரெட்டியார்பட்டி நாராயணன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரெட்டியார்பட்டி நாராயணன், காங்கிரஸ் வேட்பாளரைத் தோற்கடித்து அபார வெற்றி பெற்றார். 2021-ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய இவர், தற்போதைய தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார்.
தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாலும், சிட்டிங் தொகுதி கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாலும் அதிருப்தியடைந்த நாராயணன், இன்று அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகியுள்ளார்.
மேலும் கட்சியிலிருந்து விலகியுள்ள ரெட்டியார்பட்டி நாராயணன், அத்தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடவோ அல்லது வேறு முக்கிய அரசியல் கட்சியில் இணைந்து களம் காணவோ திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நெல்லை மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு காரணமான அமமுகவிற்காக எதற்காக உழைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய நாராயணன் கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
