தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய நகர்வாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளராக இருந்த டி. செல்வம், அக்கட்சியிலிருந்து விலகி இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) முறைப்படி இணைந்தார்.

கட்சி கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, நேற்று (மார்ச் 25) டி. செல்வம் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிச்சயமற்ற சூழலில், இன்று  செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு அவர் வருகை தந்தார்.

கட்சித் தலைவர் விஜய் அவர்களை நேரில் சந்தித்த டி. செல்வம், அவருக்கு சால்வை அணிவித்து தன்னை முறைப்படி கட்சியில் இணைத்துக் கொண்டார். இவருடன் காங்கிரஸின் மேலும் சில முக்கிய நிர்வாகிகளும் தவெக-வில் இணைந்துள்ளதாகத் தெரிகிறது.

முன்னணி அரசியல் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய கட்சியில் இணைந்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் தவெக-வின் இந்த விரிவாக்கம் மற்ற கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் முன்னதாக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பனையூர் அலுவலகத்தில் நிற்பதாகவும் அவர்கள் கண்டிப்பாக விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார்கள் என்றும் சமீபத்தில் ஆதவ் அர்ஜுனா கூறியிருந்த நிலையில் தற்போது ஒரு நிர்வாகி இணைந்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.