தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்த கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இதற்குப் பிரபல பின்னணி பாடகி சின்மயி கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அதாவது விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த மார்ச் 10-ஆம் தேதி இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, மறுநாள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த வழக்கில் தர்ம முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.வி.சேகரிடம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் பாலியல் குற்றங்கள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர்,
“தமிழகத்தில் நடக்கும் பாலியல் குற்றங்களையும், சட்டம் ஒழுங்கையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. பெண் குழந்தைகளைப் பெற்றோர்கள் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்தப் பெண் புதருக்குள் சென்றதாகச் சொல்கிறார்கள். அவர் ஏன் அங்குச் சென்றார்? புதருக்குள் எல்லாம் போலீஸாரால் விளக்கு போட முடியுமா? சுதந்திரத்தை விடப் பாதுகாப்புதான் முக்கியம்,” என்று பேசினார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பிலேயே தவறு இருப்பது போன்ற அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளானது.
Based on this clip – Mr S Ve Shekhar seems to ask why the Vilathikulam, Thoothukudi brutal rape and murder victim went behind shrubs in a forest area – the cops cant come there and shine a light everywhere.
The girl reportedly went to relieve herself – something people without… https://t.co/teKLUjtusl
— Chinmayi Sripaada (@Chinmayi) March 26, 2026
எஸ்.வி.சேகரின் இந்த கருத்துக்குப் பாடகி சின்மயி தனது சமூக வலைதளப் பக்கத்தில் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “வீட்டில் கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால், வேறு வழியின்றி இயற்கை உபாதை கழிக்கச் செல்லும் சிறுமிகளும், இளம்பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது இந்தியாவில் தொடர்கதையாக உள்ளது. ஆனால், எவ்வித அச்சமுமின்றித் தாங்கள் விரும்பும் இடத்தில் பாதுகாப்பாகச் சிறுநீர் கழிக்கக் கூடிய ஆண்களால், பெண்களின் இந்தத் துயரத்தை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது,” என்று சாடியுள்ளார்.மேலும், காவல்துறையால் எல்லா இடங்களிலும் விளக்கு போட முடியாது என்று பொறுப்பற்ற முறையில் பேசுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
