தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) பெண் தொண்டர்கள் மற்றும் ரசிகைகளை “விபச்சாரிகள்” என விமர்சித்தது குறித்து மன்னிப்பு கேட்க முடியாது என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக தலைவர் நடிகர் விஜய் தொடர்பான பல்வேறு தனிப்பட்ட சர்ச்சைகளின்போது, அவரது தீவிர பெண் ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் விவாதத்திற்கு உள்ளாகின. “கணவரை விட விஜய்தான் முக்கியம்” என்றும், “அவருக்கு மனைவியாகக் கூட இருப்போம்” என்றும் சில பெண்கள் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய வீடியோக்கள் அப்போது வைரலாகின.
இந்தச் சூழலை முன்வைத்து அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய பொன்ராஜ், “படிப்பறிவில் சிறந்த தமிழ்நாட்டில் இப்படி ஒரு தற்குறிக் கூட்டம் இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிய விஜய்க்கு நன்றி. இவர்கள் வரைமுறை இல்லாத கூட்டம், விபச்சாரிகள் நிறைந்த ரசிகைகள் கூட்டம்” என்று மிகக் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி விமர்சித்திருந்தார்.
பொன்ராஜின் இந்த இழிவான பேச்சுக்குத் தமிழக வெற்றி கழகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அவர் தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மீண்டும் கூறுகையில், “நான் பேசியதற்காக யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன். ‘விபச்சாரி’ என்று சொன்ன வார்த்தையைத் திரும்பப் பெறப் போவதில்லை. விபச்சாரிகளை விபச்சாரி என்றுதான் சொல்ல முடியும். அப்படிச் சொன்னால்தான் அவர்களுக்கு அந்த வலி புரியும். எனவே, எனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை,” என்று பிடிவாதமாகத் தெரிவித்துள்ளார்.
பெண்களைப் பொதுவெளியில் இவ்வளவு அநாகரிகமாகச் சாடிய பிறகும், அதற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் பொன்ராஜ் பேசி வருவது தவெக தொண்டர்கள் மற்றும் மகளிர் அமைப்புகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் நாகரிகம் இன்றிப் பேசும் இத்தகைய நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. ஏற்கனவே தவெக தலைவர் விஜய், “பெண்களை இழிவாகப் பேசினால் சும்மா இருக்க மாட்டோம்” என எச்சரித்துள்ள நிலையில், பொன்ராஜின் இந்தத் தொடர் பிடிவாதம் இரு தரப்பிற்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
