முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் உதவியாளராகப் பணியாற்றிய பொன்ராஜ், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) பெண் தொண்டர்களைக் குறித்துத் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் மிகவும் இழிவாகப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் பொன்ராஜ் அளித்த பேட்டியில், தவெக பெண் தொண்டர்களை “தற்குறிக் கூட்டம்” என்றும், குடும்ப உறவுகளைக் கொச்சைப்படுத்தும் விதமாகவும் மிகவும் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்துள்ளார். தமிழகத்தின் கல்வி அறிவையும், கலாச்சாரத்தையும் முன்வைத்து அவர் பேசிய அதே வேளையில், பெண்களை “விபச்சாரிகள்” என ஒப்பிட்டுப் பேசியது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
நாடே போற்றும் உன்னதத் தலைவரான அப்துல் கலாமிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஒரு நபர், பொதுவெளியில் இவ்வளவு தரம் தாழ்ந்த சொற்களைப் பிரயோகிப்பது முறையா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசியல் மாற்றுக் கருத்துக்களை நாகரிகமான முறையில் எதிர்கொள்ளத் துணியாமல், பெண்களின் தனிப்பட்ட ஒழுக்கத்தைச் சாடுவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த 2016-ஆம் ஆண்டு ‘அப்துல் கலாம் லட்சிய இந்திய கட்சி’யைத் தொடங்கிய பொன்ராஜ், பின்னர் அதை மக்கள் நீதி மய்யத்துடன் இணைத்தார். தற்போது மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் உள்ள நிலையில், ஆளுங்கட்சியின் கவனத்தைப் பெறவும் அல்லது வரும் சட்டமன்றத் தேர்தலில் சுய லாபம் அடையவுமே இதுபோன்ற கீழ்த்தரமான விமர்சனங்களை அவர் முன்வைப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
பொன்ராஜின் இந்த அநாகரிகப் பேச்சுக்குத் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து விஜய் விடுத்துள்ள அறிக்கையில், பெண்களை இழிவாகப் பேசுவதை எக்காரணம் கொண்டும் சும்மா வேடிக்கை பார்க்க முடியாது. இது ஒரு அநாகரிக அரசியல். தீய சக்தியான திமுக-விற்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் பெண்கள் நிச்சயமாகத் தக்கப் பதிலடி கொடுப்பார்கள்,” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். பொன்ராஜ் தனது இழிவான பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.
