தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவது என்ற தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) தலைவர் ஜி.கே.வாசனின் முடிவுக்குக் கட்சிக்குள்ளேயே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமாகாவின் முக்கிய நிர்வாகிகளான பிஜு சாக்கோ மற்றும் புருஷோத்தமன் ஆகியோர் தங்களது கட்சிப் பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். “பெரிய கட்சியான அதிமுகவின் சின்னத்தில் நிற்காமல், தாமரை சின்னத்தில் நிற்க வேண்டிய அவசியம் என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர்கள், ஜி.கே.வாசனின் இந்தத் தன்னிச்சையான முடிவால் தாங்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், “நாங்கள் அவரோடு சேர்ந்து பலிகடா ஆக முடியாது” என்று அவர்கள் கூறியிருப்பது தமாகா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி விவகாரத்தில் மூத்த நிர்வாகிகள் வெளியேறியிருப்பது ஜி.கே.வாசனுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.