தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இதில் திமுக அமைச்சர்கள் போட்டியிடும் 14 முக்கியத் தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு அ.தி.மு.க. ஒதுக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில், அ.தி.மு.க. 169 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 65 இடங்களிலும் போட்டியிடுகின்றன. கட்சிகளுக்கு வாரியாக ஒதுக்கப்பட்ட தொகுதிகள்,

  • அ.தி.மு.க: 169

  • பா.ஜ.க: 27

  • பா.ம.க: 18

  • அ.ம.மு.க: 11

  • த.மா.கா: 5

  • இந்திய ஜனநாயக கட்சி: 2

  • த.ம.மு.க / புரட்சி பாரதம்: தலா 1

தற்போதைய தி.மு.க. அமைச்சர்கள் போட்டியிடும் 14 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுவதைத் தவிர்த்துள்ள அ.தி.மு.க., அந்த இடங்களை கூட்டணிக் கட்சிகளுக்குப் பிரித்து வழங்கியுள்ளது. அதன்படி பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சர்களின் தொகுதிகள்: திருவண்ணாமலை (எ.வ.வேலு), திருப்பத்தூர் (பெரியகருப்பன்), பத்மநாபபுரம் (மனோ தங்கராஜ்), ஆவடி (நாசர்), திருச்செந்தூர் (அனிதா ராதாகிருஷ்ணன்), ராசிபுரம் (மதிவேந்தன்).

அ.ம.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சர்களின் தொகுதிகள்: திருச்சி மேற்கு (கே.என்.நேரு), மன்னார்குடி (டி.ஆர்.பி.ராஜா), சைதாப்பேட்டை (மா.சுப்பிரமணியன்).

த.மா.கா.வுக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சர்களின் தொகுதிகள்: ஒட்டன்சத்திரம் (அர.சக்கரபாணி), ஈரோடு மேற்கு (முத்துசாமி), ராணிப்பேட்டை (ஆர்.காந்தி).

பா.ம.க. மற்றும் இ.ஜ.க: அமைச்சர் ராஜேந்திரன் போட்டியிடும் சேலம் வடக்கு தொகுதி பா.ம.க.வுக்கும், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் போட்டியிடும் குன்னம் தொகுதி இந்திய ஜனநாயக கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

செல்வாக்குமிக்க அமைச்சர்களை எதிர்த்துக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களைக் களமிறக்குவதன் மூலம், அந்தந்தத் தொகுதிகளில் வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. வேட்புமனுத் தாக்கல் தொடங்கவுள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தற்போது தீவிரம் காட்டி வருகின்றன.