தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன்களில் ரீல்ஸ், வீடியோக்கள் மற்றும் சமூக ஊடகங்களைப் பார்க்கும் பழக்கம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் தீவிரமாகப் பரவியுள்ளது. இந்த மொபைல் மோகம் எந்த அளவிற்குச் சென்றுள்ளது என்றால், இளம் தாய்மார்கள் தங்களின் கை குழந்தைகளுக்குப் பால் புகட்டும் நேரத்தைக் கூட மொபைல் திரையைப் பார்த்துக் கொண்டே கழிக்கும் நிலை உருவாகியுள்ளது.
சர்வதேச தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, இந்த தவறான பழக்கம் தாய் மற்றும் குழந்தை இருவருக்குமே எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தாய்ப்பால் கொடுக்கும் தருணம் என்பது வெறும் உணவளிக்கும் முறை மட்டுமல்ல; அது தாய்க்கும் சேய்க்கும் இடையே உணர்வுபூர்வமான பிணைப்பை உருவாக்கும் மிக முக்கியமான நேரமாகும்.
தாய் குழந்தையைப் பார்த்து புன்னகைப்பதும், அதன் கண்களைப் பார்த்துப் பேசுவதும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் உணர்ச்சிப் பூர்வமான பாதுகாப்பு உணர்விற்கும் மிகவும் அவசியமானது. ஆனால், தாய் மொபைல் திரையில் கவனத்தைச் செலுத்தும் போது, இந்த இயல்பான கண் தொடர்பும் உணர்வுபூர்வமான பிணைப்பும் முற்றிலும் தடைபடுகிறது.
மேலும், பாலூட்டும் போது தாயின் கவனம் மொபைலில் இருப்பதால், குழந்தை சரியாகப் பால் குடிக்கிறதா, மூச்சுத் திணறல் ஏதும் ஏற்படுகிறதா அல்லது பாலின் அளவு போதுமானதாக இருக்கிறதா என்பதில் கவனம் சிதற வாய்ப்புள்ளது. இதனால் சில நேரங்களில் குழந்தைகளுக்குப் பால் புரையேறுதல் போன்ற அசௌகரியங்கள் ஏற்படக் கூடும்.
அதுமட்டுமின்றி, தாயின் உடலில் பால் சுரப்பதற்கு காரணமான ஹார்மோன் மாற்றங்களுக்கும் மன அமைதியும் கவனமும் தேவை என்பதால், மொபைல் பயன்பாடு அந்த இயல்பு நிலையைப் பாதிக்கலாம். எனவே, தாய்ப்பால் புகட்டும் அந்த சில நிமிடங்களை மொபைல் திரைக்குத் தாரைவார்க்காமல், முழுக்க முழுக்கத் தங்களின் குழந்தைகளுக்காகவே செலவிட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
கைபேசியைத் தள்ளி வைத்துவிட்டு குழந்தையுடன் உணர்வுபூர்வமாகச் செலவிடும் ஒவ்வொரு தருணமும் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், தாயின் மன நிம்மதிக்கும் மிக மிக அவசியமாகும்.
