மேற்காசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழல் குறித்து விவாதிக்க மத்திய அரசு சார்பில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்துப் பேசுகையில் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தார்.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நிலைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் உச்சகட்டமாக, உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் ஈரான் – அமெரிக்கா இடையே சமரசம் செய்ய பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது குறித்து நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் தாரிக் அன்வர் பேசுகையில், “பாகிஸ்தான் மத்தியஸ்தர் பாத்திரத்தை வகிக்கிறது, ஆனால் இந்தியா மௌன சாட்சியாக உள்ளது” என விமர்சித்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்,

“இந்தியா ஒருபோதும் பாகிஸ்தானைப் போல ‘தரகர் நாடாக’  செயல்படாது. நமது வெளியுறவுக் கொள்கை தன்னாட்சி உடையது. நாங்கள் யாருக்காகவும் மத்தியஸ்தம் செய்வதில்லை. பாகிஸ்தானுக்கு இந்த இடைத்தரகர் வேலை ஒன்றும் புதிதல்ல; 1981 முதலே அமெரிக்கா தனது தேவைகளுக்காகப் பாகிஸ்தானைப் பயன்படுத்தி வருகிறது,” என்று காட்டமாகத் தெரிவித்தார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மேற்காசியப் போரினால் இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு எந்த நிலையில் உள்ளது என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இருப்பினும், இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் (TMC) பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.