தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார், இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) தன்னை இணைத்துக் கொண்டார். நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் பணியாற்றி வந்த ரஞ்சனா நாச்சியார், சமீபகாலமாக அக்கட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, விஜய்யின் குடும்ப விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சையில், ரஞ்சனா நாச்சியார் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று சென்னையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்த ரஞ்சனா நாச்சியார், அவருக்கு மலர்க்கொத்து வழங்கி திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்வின் போது திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மேலும் ரஞ்சனா நாச்சியார் இதற்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்து விலகி தவெக-வில் இணைந்த அவர், தற்போது ஆளுங்கட்சியான திமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்துள்ளார்.
