தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 6-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7-ஆம் தேதியும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஏப்ரல் 9-ஆம் தேதியும் கடைசி நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதைபோன்று கேரளா & அசாம்: இவ்விரு மாநிலங்களிலும் ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 23-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
புதுச்சேரி: மார்ச் 23 வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். இங்கு ஏப்ரல் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
மேற்கு வங்கம்: இங்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ஆம் தேதியும் நடைபெறும்.
தேர்தல் நாளன்று வாக்காளர்கள் தடையின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதியும், கேரளா, புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் ஏப்ரல் 9-ஆம் தேதியும் இந்த விடுமுறை நடைமுறையில் இருக்கும். தனியார் நிறுவனங்கள் இந்த உத்தரவை மீறினால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது.
மேலும் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் அட்டை, பான் கார்டு உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
