இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதன்படி கேரளாவில் பரவூரில் உள்ள குண்ணுக்கார பகுதியை சேர்ந்த மந்திர ஷர்மா என்ற பெண் ஆன்லைனில் வேலை கிடைத்து விட்டதாக நம்பி 7.74 லட்சம் ரூபாயை பறிகொடுத்துள்ளார். கடந்த ஜூன் மாதம் இவரின் போனுக்கு போலி நிறுவனம் ஒன்றிலிருந்து மெசேஜ் வந்துள்ளது. அதில் உங்களுக்கு எங்கள் நிறுவனத்தில் வேலை கிடைத்து விட்டது பல்வேறு இணைய சேவைகள் குறித்து மதிப்பீட்டு செய்து அது குறித்த விமர்சனங்களை வழங்க வேண்டும், இதுதான் உங்களின் தினசரி வேலை என தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பி அந்தப் பெண் அவர்கள் கூறிய பணியை செய்து முடித்து வந்துள்ளார். அப்போது திடீரென தங்களின் நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் என கூறியுள்ளனர். இதனை நம்பி அந்த பெண் தன்னிடம் இருந்த 7.91 லட்சம் ரூபாயை நிறுவனத்தில் முதலீடு செய்த நிலையில் அவருக்கு முதலில் 17,000 கிடைத்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு பிறகு அந்த இணையதளம் வேலை செய்யாமல் முடங்கிப் போனது.

இதனைத் தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதாக நினைத்த அந்த பெண் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது போன்ற மோசடி வேலைவாய்ப்புகளில் சிக்காமல் இருப்பதற்கு லிப்டிங்ன், நாக்ரி, இன்டீன் போன்ற நம்பகமான வேலைவாய்ப்பு தளங்களில் இருந்து வரும் வாய்ப்புகளுக்கு மட்டும் விண்ணப்பிக்கலாம். வேலை தருகிறோம் என்ற பெயரை அனுப்பப்படும் எந்த ஒரு லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம். நிறுவனத்தின் பெயரை கூகுளில் தேடிப் பார்த்தாலே சம்பந்தப்பட்ட நிறுவனம் உண்மையானதா அங்கு வேலை வாய்ப்புகள் உள்ளதா என்பது போன்ற விவரங்கள் நமக்கு தெரிந்துவிடும்.