மத்திய அரசு சமீபத்தில் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றி, சட்டமாக்கியுள்ள புதிய ஆன்லைன் கேமிங் மசோதா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கப்படும் இந்த சட்டத்தின் காரணமாக, டிரீம் 11, எம்.பி.எல் போன்ற நிறுவனங்கள் தங்கள் பிளாட்ஃபாரங்களில் பணம் வைத்து விளையாடும் ஆட்டங்களை நிறுத்த போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான ஜெர்சி ஸ்பான்சராக இருந்த டிரீம் 11, தனது விளம்பர ஒப்பந்தத்தை தொடர்ந்து நிறைவேற்ற முடியாது என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. டிரீம் 11 – பி.சி.சி.ஐ. இடையிலான இந்த ஒப்பந்தம் 2023ம் ஆண்டு ₹358 கோடி மதிப்பில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும், தற்போதைய சட்ட மாறுபாடுகள் காரணமாக, இரண்டு தரப்பினரும் ஒப்பந்தத்தை முறிக்க முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா கூறியதாவது: “ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் மசோதா சட்டமாகியதால், டிரீம் 11 உடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்கிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற சூதாட்ட சார்ந்த நிறுவனங்களுடன் பி.சி.சி.ஐ. உறவை வைத்துக்கொள்ளாது,” என்றார். அவரது இந்த அறிக்கையால், இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால விளம்பரத் தளங்களில் பெரும் மாற்றம் நிகழவிருக்கிறது.

தற்போது, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சராக யார் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் விளம்பரதாரர்களிடையே அதிகரித்து வருகிறது. பி.சி.சி.ஐ., விரைவில் புதிய ஸ்பான்சர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பு உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.