அடுத்த மாதம் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை (T20) கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டு, துணை கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்றுள்ளார்.
ஆனால், அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
சமீபத்திய வெள்ளைப்பந்து தொடர்களில் கலக்கி வரும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடரில் முக்கியமான வீரராக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த அவர், தற்போது வெளியான தகவலின் படி ஆசிய கோப்பை அணியில் நிச்சயம் இடம்பெறுவோம் என்ற நம்பிக்கையில், துலீப் டிராபியில் மேற்கு மண்டல அணியின் கேப்டன்சியை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
துலீப் டிராபி ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கவுள்ளது. மேற்கு மண்டல அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்ய பிசிசிஐ திட்டமிட்டிருந்தது. ஆனால், ஆசிய கோப்பையில் ஆடுவேன் என்ற எதிர்பார்ப்பில் அவர் அந்த வாய்ப்பை எடுத்துக் கொள்ள மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து, ஷர்துல் தாக்கூருக்கு கேப்டன்சிப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது சாதாரண வீரராக அணியில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவல் தற்போது வெளியானதும், கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், ஐயரின் மனநிலை குறித்து கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
