மகாராட்டிராவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான சூர்யான்ஷ் ஷெட்ஜேவுக்கு இந்திய அணியில் விளையாடுவதற்கான அடித்தளம் கிடைத்துள்ளது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர் அதிரடியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி போட்டியின் போது, ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியின் இடது தொடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரைப் பரிசோதித்த பிசிசிஐ (BCCI) மருத்துவக் குழு, அவர் குணமடைய குறைந்தது 4 வாரங்கள் ஆகும் என்பதால், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு (NCA) செல்ல அறிவுறுத்தியுள்ளது. இதனால் நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக சூர்யான்ஷ் ஷெட்ஜே இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
🚨 News 🚨
Suryansh Shedge replaces injured Nitish Kumar Reddy in #TeamIndia‘s squads for Ireland and England series.
More Details 🔽 | #IREvIND | #ENGvIND https://t.co/M92NI1TbE0
— BCCI (@BCCI) June 23, 2026
தற்போது மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கும் மும்பையைச் சேர்ந்த சூர்யான்ஷ் ஷெட்ஜே, சமீபத்தில் இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடரில் ‘இந்தியா-ஏ’ அணிக்காக நடுத்தர வரிசையில் களம் இறங்கி 5 போட்டிகளில் 147 ரன்களைக் குவித்ததோடு, 23 ஓவர்களும் பந்து வீசி அசத்தினார். அதுமட்டுமின்றி, 2024-25 சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கும் முக்கியப் பங்காற்றினார். அந்தத் தொடரில் கீழ் வரிசையில் களம் இறங்கி 251.92 என்ற அசுர ஸ்ட்ரைக் ரேட்டில் 131 ரன்களை விளாசினார். 2026 ஐபிஎல் தொடரிலும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய இவருக்கு, தற்போது அதற்கான மிகச்சிறந்த பலனாக இந்திய டி20 அணியில் விளையாடும் மாபெரும் வாய்ப்பு தேடி வந்துள்ளது.
