
திண்டுக்கல் மாவட்டத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை ஐகோர்ட் கிளையில், திண்டுக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்படும் மணல் குவாரிகள் குறித்து மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மாவட்ட நிர்வாகம் இதுவரை மணல் குவாரிகள் செயல்பட அனுமதி வழங்கவில்லை. ஆனால் நத்தம், ஓட்டன் சத்திரம், பழனி, வேடசந்தூர் போன்ற பகுதிகளில் சிலர் சட்டவிரோதமாக ஆற்று மணலை கடத்தி வருகிறார்கள். நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல்கள் அள்ளப்பட்டு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.
இதனால் அப்பகுதி நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மணல் குவாரி உரிமையாளர்கள் மற்றும் அவர்களுக்கு உதவும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் குவாரிகளை சீல் செய்ய உத்தரவிட்டனர்.
அதோடு உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவு வழங்கினர். “கனிம வளம் நமது நாட்டின் சொத்து….. அந்த இயற்கை வளத்தை ஒருபோதும் திருடுவதற்கு அனுமதிக்க கூடாது. அதற்கு துணை போகும் அதிகாரிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து இதே வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குவாரிகள் சீல் வைக்கப்பட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறினார்.
அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணல் குவாரிகள் முன்புறமாக சீல் வைக்கப்பட்ட பின்புறத்தில் மணல் கடத்தப்பட்டு வருகிறது என்றும், அதற்கு ஆதாரமான புகைப்படங்களையும் நீதிபதியிடம் கொடுத்தார். அதனை கண்டு கோபமடைந்த நீதிபதிகள் அதிகாரிகளின் உதவியுடன் மணல் குவாரிகள் செயல்படுகிறதா என்று கேட்டனர்.
அதன் பின் “இதுபோன்ற செயல்களில் அதிகாரிகள் ஈடுபடுவது தவறு. இது குறித்து மாவட்ட கலெக்டர் நீதிமன்றத்தில் வரும் 16ஆம் தேதி ஆஜராகி உண்மைகளை விளக்கி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதி தீர்ப்பு வழங்கிய நிலையில் இந்த விசாரணையை மற்றொரு தேதிக்கு ஒத்தி வைத்தனர்.