தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து நாயகனாக வலம் வந்தவர்தான் நடிகர் சரவணன். கார்த்தியுடன் இவர் நடித்த பருத்திவீரன் படம் திரையுலகில் மேலும் புகழை சேர்த்தது. நடிகர் சரவணன் சென்ற 2014-ம் வருடம் சென்னை மவுலிவாக்கத்தில் செண்பகராமன் என்பவரிடம் லேக் வியூ அடுக்கு மாடி குடியிருப்பில் 2 வீடுகளை வாங்கி உள்ளார்.
அந்த வீடுகளுக்கு சொந்தமான கார் பார்க்கிங்கும் 700-800 சதுரடி இருந்துள்ளது. இந்த இடத்தை அப்பகுதியிலுள்ள இராமமூர்த்தி என்பவர் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து கடை அமைத்து அதற்கு மின் இணைப்பு வாங்கிக்கொண்டதாகவும், அதற்குரிய வரியை செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த சரவணன் அந்த இடத்தை மீட்டு தரும்படி கடந்த 6 மாதங்களுக்கு முன் போரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் தாமோ அன்பரசனிடம் தன் இடத்தை மீட்டு தரும்படி கோரிக்கை மனு அளித்துள்ளார் சரவணன். இம்மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார்.