கர்நாடக அரசின் மைசூரு சான்டல் சோப் விளம்பரத்திற்காக நடிகை தமன்னாவை விளம்பரத் தூதராக நியமித்தது பெரும் பேசுபொருளானது.

கர்நாடக அரசின் கர்நாடக சோப்பு மற்றும் மார்ஜக நிறுவனம் (KSDL) தயாரிக்கும் மைசூரு சான்டல் சோப், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரபலமாக விற்பனையாகி வருகிறது. இந்த சோப்பை மேலும் பிரபலப்படுத்த, கர்நாடக அரசு பிரபல நடிகைகளை விளம்பரத் தூதர்களாக நியமித்து, டி.வி., நாளிதழ்கள் மூலம் விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது.

சமீபத்தில், நடிகை தமன்னாவை 2 ஆண்டு ஒப்பந்தத்தில் ரூ.6.20 கோடிக்கு விளம்பரத் தூதராக நியமித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கன்னட நடிகைகளை புறக்கணித்து, பிறமொழி நடிகையை தேர்வு செய்ததற்கு எதிர்க்கட்சிகளும், கன்னட அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், உலகளவில் சோப்பை பிரபலப்படுத்த பிரபலமானவரை தேர்ந்தெடுத்ததாக வேண்டும் என அரசு விளக்கமளித்துடன்  அந்தவிவகாரம் முடிவடைந்தது.

இந்நிலையில், கர்நாடக சட்டசபையில் பா.ஜ.க. உறுப்பினர் சுனில்குமார், மைசூரு சான்டல் சோப்பின் விளம்பரம் மற்றும் பிரசாரத்திற்காக கடந்த 2 ஆண்டுகளில் அரசு எவ்வளவு செலவிட்டது? எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு அரசு தரப்பில், கடந்த 2023-24 மற்றும் 2024-25 ஆண்டுகளில் மொத்தம் ரூ.48 ,88 ,21,350 செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில், தமன்னாவுக்கு ரூ.6.20 கோடியும், கன்னட நடிகை இஷானி ஷெட்டிக்கு ரூ.15 லட்சமும், கன்னட பிரபலங்களான நிமிகா ரத்னாகர், சீனிவாசமூர்த்தி, சானியா ஐயர், ஆராதனா ஆர். ஆகியோருக்கு மொத்தமாக ரூ.62 லட்சத்து 87 ஆயிரமும் வழங்கப்பட்டதாக அரசு விளக்கமளித்தது.

இந்த விளம்பர முயற்சிகள் மூலம், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மைசூரு சான்டல் சோப்பை மேலும் பிரபலப்படுத்துவதே அரசின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டது.