இமாச்சல பிரதேசத்தில் கனமழை கொட்டி தீர்ப்பதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது மண்டி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்ப்பதால் பொதுமக்கள் மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மண்டி மாவட்ட சுகாதார பணியாளரான கமலா தேவி ஒரு பச்சிளம் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக தனது உயிரை பணயம் வைத்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் சமீபத்தில் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும். இதை அறிந்த கமலாதேவி நீங்கள் வர வேண்டாம் நானே உங்களிடத்திற்கு வந்து தடுப்பூசி போட்டு செல்கிறேன் எனக்கூறி தடுப்பூசியை ஒரு பதப்படுத்தும் பெட்டியில் வைத்துக்கொண்டார்.

பின்னர் ஆர்ப்பரிக்கும் ஆற்றில் ஒரு பாறையில் இருந்து மற்றொரு பாறைக்கு குதித்து ஆபத்தான முறையில் கமலாதேவி நீர் நிலையை கடந்து சென்றார். இதுகுறித்து அவர் கூறும் போது, குழந்தையை நினைக்கும்போது வருத்தமாக இருந்தது. சரியான நேரத்தில் தடுப்பூசி போடவில்லை என்றால் தொற்று பாதிப்பு ஏற்படும். அவர்களால் மருத்துவமனைக்கு வர முடியாத நிலை.

இதனால் நானே அவர்களை தேடி செல்ல நினைத்தேன். எனக்கும் 2 பிள்ளைகள் உள்ளனர். கணவர் பட்டதாரி பயிற்சி ஆசிரியராக வேலை பார்க்கிறார். நான் நீர் நிலையை தாண்டி செல்லும் போது யார் வீடியோ எடுத்தார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அதை அறிந்து நிறைய பேர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு என்னை பாராட்டி வருகின்றனர் என கமலாதேவி கூறியுள்ளார்.