புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கம், செய்தியாளர்களைச் சந்தித்து, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். விஜய்யின் மதுரை மாநாடு அரசியல் மாநாடு அல்ல, வெறும் ரசிகர்கள் கூட்டம் எனக் கிண்டல் செய்தார்.
“எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் படங்களை வைத்து கூட்டத்தை ஈர்க்க முயன்றார் விஜய். அவர்களது கொள்கைகளைப் பின்பற்ற அவர்களது கட்சிகள் இருக்கும்போது, விஜய் ஏன் அவற்றைப் பேச வேண்டும்? அவருக்கு எந்தக் கொள்கையும் இல்லை. மேலும் பாஜகவை எதிரி என சொல்வதற்கு அவருக்கு அருகதை இல்லை எனவும், சினிமாவில் பணம் சம்பாதித்துவிட்டு, இப்போது அரசியலுக்கு வந்துள்ளார்,” எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், விஜய்யின் ‘ஸ்டாலின் அங்கிள்’ கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த ராமலிங்கம், “தமிழக முதலமைச்சரை ‘மாண்புமிகு’ என அழைக்க வேண்டியவர், சினிமா வசனம் போல் ‘அங்கிள்’ என்கிறார். இதை தி.மு.க.வினர் எப்படி பொறுத்துக் கொள்கிறார்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சர் ரங்கசாமியும், விஜய்யும் நெருக்கமாக இருப்பது குறித்து, “ரங்கசாமி, விஜய்யுடன் பேசுவது நட்பு ரீதியானது மட்டுமே. அவர் புத்திசாலி; மக்களுக்கு நல்ல ஆட்சி தருவதை உணர்ந்தவர்.
விஜய்யால் ஆட்சி அமைக்க முடியாது. அவருக்கு எவ்வளவு வாக்கு வங்கி என்பது இந்தத் தேர்தலில் தெரியும். ரங்கசாமி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே நீடிப்பார்,” என உறுதியாகக் கூறினார்.
