தெற்கு டெல்லியின் , தனது கிளினிக்கை நிர்வகித்து வந்த மீனா (45) என்ற பெண் ஊழியரைப் பில்லி சூனியம் வைத்ததாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், உள்ளூர் மருத்துவர் மனிஷ் குப்தா என்பவர் பேஸ்பால் பேட் மற்றும் கத்தியால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரத்தக்கறையுடன் சடலமாக மீட்கப்பட்ட மீனாவின் கொலை விவகாரத்தில், தீவிர விசாரணைக்குப் பிறகு மருத்துவர் மனிஷ் குப்தாவைடெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், கடந்த சில நாட்களாகத் தான் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகவும், மீனா தனக்கு எதிராகச் செய்வினை செய்ததால் தனது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பாதிக்கப்படைந்ததாகத் தான் நம்பியதே இதற்குக் காரணம் என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த மூடநம்பிக்கை காரணத்தைத் தாண்டி கிளினிக் தொடர்பான நிதிப் பரிவர்த்தனைகள் அல்லது வேறு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்ற கோணத்திலும், மீனாவின் மொபைல் போன் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றி போலீசார் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.