மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எத்தனை தீர்மானங்களை நிறைவேற்றினாலும் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனும், கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே இன்று (ஜூன் 19) அதிரடியாகத் தெரிவித்துள்ளார். காவிரி நதியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட முயற்சிப்பதற்குக் காலகாலமாகத் தமிழக அரசு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சட்டமன்றத்தில் ஏகமனதாகத் தீர்மானங்களையும் நிறைவேற்றி வருகின்றன.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே, “மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையையோ அல்லது யாருடைய உரிமையையோ நாங்கள் பறிக்க முயற்சி செய்யவில்லை. கடலில் வீணாகக் கலக்கும் உபரி நீரை மட்டுமே கர்நாடக மக்களின் குடிநீர் தேவைக்காகப் பயன்படுத்த முயன்று வருகிறோம். இதற்குத் தமிழக அரசு எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றினாலும் எங்களுக்குப் பாதிப்பில்லை.
தமிழக அரசுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றால், அவர்கள் தாராளமாகச் சட்டப்படியான தீர்வைத் தேடிக் கொள்ளலாம்” எனத் தெனாவெட்டாகக் கூறியுள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் எதிர்ப்பைத் துச்சமாக மதித்துக் கர்நாடக அமைச்சர் பேசியுள்ள இந்த கருத்து, தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
