ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா, தற்போது ரன் ஏதும் எடுக்க முடியாமல் தவித்து வருவது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருந்தும், இந்தத் தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் ஒரு ரன் கூட எடுக்காமல் ‘டக் அவுட்’ ஆகி ஏமாற்றம் அளித்துள்ளார்.

குறிப்பாக, அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்துக்கு எதிரான போட்டிகளில் ஒற்றை இலக்கத்தைக் கூட தொடாமல் அவர் அவுட் ஆனது விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், இளம் வீரர் அபிஷேக் சர்மாவுக்கு இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் ஒரு முக்கியமான அறிவுரையை வழங்கியுள்ளார்.

“அபிஷேக் ஒரு சிறந்த பேட்ஸ்மேன், ஆனால் அவர் எடுத்த உடனே சிக்ஸர், பவுண்டரி அடிக்க வேண்டும் என்று தனக்குத் தானே அழுத்தம் கொடுத்துக் கொள்கிறார்.

முதல் பந்திலேயே அதிரடி காட்ட முயலாமல், முதலில் ஒரு ரன் எடுத்து தனது கணக்கைத் தொடங்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் வரை களத்தில் நிலைத்து நின்றுவிட்டால், அதன்பிறகு தனது இயல்பான ஆட்டத்தை அவர் ஆடலாம். புத்திசாலித்தனமாக விளையாடினால் மட்டுமே இந்த இக்கட்டான சூழலில் இருந்து அவரால் மீள முடியும்” என கவாஸ்கர் அட்வைஸ் செய்துள்ளார்.