பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தற்போதைய நிலை குறித்தும், இந்திய அணியுடனான போட்டி குறித்தும் அந்த நாட்டு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் மிகுந்த வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் 90-களில் பாகிஸ்தான் அணியின் ஆதிக்கம் குறித்து அவர் பேசியதாவது: 90-களில் இருந்த பாகிஸ்தான் அணிக்கும், தற்போதைய அணிக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது. அந்த காலத்தில் பாகிஸ்தான் அணி மிகவும் பலமாகத் திகழ்ந்தது. இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்றாலே ஒட்டுமொத்த உலகமும் ஆவலோடு எதிர்பார்க்கும். அப்போது இந்திய அணியினர் எங்களைப் பார்த்து பயந்தனர்; எங்களை மிகவும் கவனமாகவே எதிர்கொண்டனர்.”
ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இந்திய அணி தற்போது எங்களை ஒரு பெரிய சவாலாகவே எடுத்துக் கொள்வதில்லை. எங்கள் விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகோ அல்லது போட்டியில் வெற்றி பெற்ற பிறகோ கூட, அவர்கள் அந்த வெற்றியைப் பெரிதாகக் கொண்டாடுவதில்லை. அந்தளவுக்கு இந்தியாவுக்கும் எங்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உருவாகிவிட்டது,” என அமீர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் நிலையில், அந்த நாட்டு வீரரே “இந்தியா எங்களைப் பார்த்து பயப்படுவதில்லை” எனப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணி உலக அளவில் அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்திருப்பதை அமீரின் இந்தப் பேச்சு உறுதிப்படுத்துவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
