உத்தரப் பிரதேசத்தில் கிரிக்கெட் போட்டியின் போது தேனீக்கள் தாக்கியதில், மைதானத்திலேயே மயங்கி விழுந்த மூத்த கிரிக்கெட் நடுவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தின் ராகுல் சப்ரு மைதானத்தில் இளையோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு போட்டியின் போது, கான்பூரைச் சேர்ந்த மாணிக் குப்தா (65) நடுவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், எங்கிருந்தோ வந்த ஆயிரக்கணக்கான தேனீக்கள் திடீரென மைதானத்திற்குள் புகுந்து வீரர்களையும், நடுவர்களையும் சரமாரியாகத் தாக்கத் தொடங்கின. இதனால் அதிர்ச்சியடைந்த வீரர்களும் நடுவர்களும் தங்களைக் காத்துக்கொள்ள மைதானத்தை விட்டு மறைவிடங்களை நோக்கி நாலாபுறமும் சிதறி ஓடினர்.
தேனீக்களின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான நடுவர் மாணிக் குப்தா, வலி தாங்க முடியாமல் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட சக வீரர்கள் மற்றும் நிர்வாகிகள், அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தத் துயரச் சம்பவத்தை உறுதி செய்த கான்பூர் கிரிக்கெட் சங்கத் தலைவர், தேனீக்கள் கொட்டியதில் சில வீரர்களும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்தார். மேலும் கிரிக்கெட் மைதானத்தில் தேனீக்கள் தாக்கி நடுவர் உயிரிழந்த சம்பவம் விளையாட்டு வட்டாரத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
