2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, முன்னாள் வீரர்களின் விமர்சனங்களுக்கு ஷதாப் கான் அளித்த பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“முந்தைய தலைமுறை சாதிக்காத ஒன்றை (ஐசிசி தொடரில் இந்தியாவை வீழ்த்துவது) நாங்கள் செய்துள்ளோம்” என ஷதாப் குறிப்பிட்டது அப்ரிடியைக் கோபமடையச் செய்துள்ளது. இது குறித்து தனியார் தொலைக்காட்சியில் பேசிய அப்ரிடி, “ஷதாப் சொல்வது சரிதான், நாங்கள் இந்தியாவை வீழ்த்தவில்லை, அவர்கள் வீழ்த்தினார்கள்; ஆனால் அந்த வெற்றியைச் சுமக்கும் பக்குவம் அவர்களிடம் இல்லை” எனச் சாடினார்.

2021-ல் கிடைத்த அந்த ஒரே ஒரு வெற்றிக்குப் பிறகு, அணியில் நிலவும் உட்பூசல்களைக் கூட அவர்களால் நிர்வகிக்க முடியவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

“>

மேலும் பேசிய அப்ரிடி, ஷதாப் ஃபார்ம் அவுட்டில் இருந்தபோது அவருக்கு ஆதரவாகப் பேசியதை நினைவூட்டினார். “உன்னை அணியிலிருந்து நீக்க முயன்றபோது, நீதான் அணியின் முதுகெலும்பு என நாங்கள் வாதிட்டோம். ஆனால், தற்போது நீ பேட்டிங்கில் பதில் சொல்வதை விடப் பேச்சில் பதில் சொல்வதில் அதிக கவனம் செலுத்துகிறாய்” என்றார்.

நமீபியா போன்ற சிறிய அணிகளுக்கு எதிராக விளையாடுவதை விட்டுவிட்டு, நியூசிலாந்து போன்ற பெரிய அணிகளுக்கு எதிராகத் திறமையை நிரூபிக்குமாறு அவர் வலியுறுத்தினார். “நாங்கள் விளையாடிய காலத்தில் முன்னாள் வீரர்கள் எங்களைச் சபித்தபோது கூட, நாங்கள் அதைப் பொறுத்துக் கொண்டு பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடியே பதிலடி கொடுத்தோம்.

எனவே, தேவையற்ற பேச்சை விடுத்து உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி எங்களை அமைதியாக்கு” என அப்ரிடி காட்டமாகத் தெரிவித்தார்.