2026 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) முன்னுக்குப் பின் முரணான செயல்பாடுகளும், வங்கதேசத்தின் புறக்கணிப்பு முடிவும் சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
பாகிஸ்தானின் திடீர் பல்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பை தொடரில், கொழும்புவில் இந்தியாவிற்கு எதிராக விளையாட பாகிஸ்தான் முதலில் பிடிவாதமாக மறுப்பு தெரிவித்தது. பிசிசிஐ (BCCI) மற்றும் ஐசிசி (ICC) ஆகிய அமைப்புகளுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்த பாகிஸ்தான், கடைசி நேரத்தில் திடீரென தனது முடிவை மாற்றிக்கொண்டு விளையாடச் சம்மதித்தது.
இதற்கிடையில், பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியாவுக்கு வர வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) மறுத்தது. வங்கதேசத்திற்கு ஆதரவாக பாகிஸ்தானும் ‘புறக்கணிப்பு’ நாடகத்தை ஆடியது. இதனால் ஆவேசமடைந்த ஐசிசி, வங்கதேச அணியைத் தொடரிலிருந்து அதிரடியாக நீக்கிவிட்டு, அந்த இடத்திற்கு ஸ்காட்லாந்து அணியைத் தேர்வு செய்தது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சையது அஷ்ரஃபுல் ஹக் இது குறித்து ஒரு நேர்காணலில் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி, அனுபவம் இல்லாத வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாமைத் தவறாக வழிநடத்தியுள்ளார்.
பாகிஸ்தானின் பேச்சைக் கேட்டு இந்தியாவுக்கு எதிராக நின்றதால் இறுதியில் நஷ்டம் அடைந்தது வங்கதேச கிரிக்கெட் தான். ஐபிஎல் விவகாரமும் முதிர்ச்சியற்ற முடிவும் வங்கதேசத்தின் இந்தத் திடீர் புறக்கணிப்புக்கு மற்றொரு விசித்திரமான காரணமும் கூறப்படுகிறது. வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு ஐபிஎல் (IPL) தொடரில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டதைக் காரணம் காட்டி, அந்த நாட்டு அரசு இந்தியப் பயணத்தை ரத்து செய்ததாக அஷ்ரஃபுல் ஹக் குறிப்பிட்டுள்ளார்.
“பிசிசிஐ-யுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போதிய நேரம் இருந்தும், முதிர்ச்சியற்ற முறையில் எடுத்த இந்த முடிவால் லிட்டன் தாஸ், முஸ்தபிசுர் போன்ற சிறந்த வீரர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது” என அவர் வேதனை தெரிவித்தார். மேலும் அரசியல் சூழ்ச்சிகளுக்குப் பலியாகி, உலகின் இரண்டாவது மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்ட நாடான வங்கதேசம் உலகக் கோப்பை மேடையை இழந்தது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
