மும்பை டி20 லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஏஆர்சிஎஸ் அந்தேரி மற்றும் எம்எஸ்சி மராட்டா ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற அந்தேரி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் களம் இறங்கிய மராட்டா ராயல்ஸ் அணி, சின்மய் ராஜேஷ் சுதாரின் அதிரடி அரைசதத்தின் உதவியோடு 5 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து 155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய அந்தேரி அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாகச் சென்ற இந்த ஆட்டத்தின் 19-வது ஓவரில், இரு அணி வீரர்களுக்கிடையே மைதானத்தில் நடுக்கடலில் புயல் வீசியது போல பெரும் மோதல் வெடித்தது.

 


அந்தேரி அணியின் பேட்ஸ்மேன் கௌரவ் ஜாதர், சுழற்பந்து வீச்சாளர் இர்ஃபான் உமைர் வீசிய 19-வது ஓவரின் இரண்டாவது பந்தில் ஒரு பிரம்மாண்ட சிக்ஸரை பறக்கவிட்டார். ஆனால், அடுத்த பந்திலேயே இர்ஃபான் அதிரடியாக மீண்டு வந்து, கௌரவ் ஜாதரை 23 ரன்களில் எல்பிடபிள்யூ (LBW) முறையில் அவுட்டாக்கினார். அவர் அவுட்டானதும் மராட்டா ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே மற்றும் வீரர்கள் ஆக்ரோஷமாக அதைக் கொண்டாடியதால், கௌரவ் ஜாதர் கடும் அதிருப்தி அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நடுவர்கள் தலையிட்டு தடுத்தும் ஆத்திரம் அடங்காத எதிரணி வீரர் ஒருவர், அந்தேரி அணியின் கேப்டன் சிவம் துபே அமர்ந்திருந்த வீரர்கள் ஓய்வறை ருகே சென்று மீண்டும் கௌரவ் ஜாதருடன் மோதலில் ஈடுபட்டார். இரு அணியின் பயிற்சியாளர்களும் ஊழியர்களும் ஓடிவந்து இந்த மோதலைக் கட்டுப்படுத்தினர். இறுதிப்போட்டியில் நடந்த இந்த அநாகரிகமான மோதல் குறித்து மும்பை கிரிக்கெட் சங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.