தமிழக வெற்றி கழகத்தில் மாற்று கட்சியினர் இணையும் பிரம்மாண்ட விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்குத் துரோகம் செய்துவிட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். “அதிமுக எனும் கப்பல் இன்னும் மூழ்கவில்லை; அதனை முதலமைச்சர் விஜய் அவர்கள் ஒருபோதும் மூழ்க விட மாட்டார்” என்று கூறி அதிரடி கிளப்பியுள்ளார்.
மேலும், தமிழக அரசியலில் நிலவிய தீண்டாமையை ஒழித்து, சாதி, மத அரசியலுக்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது அதிமுகவும் திமுகவும் ஒன்றாகக் கைகோர்த்துவிட்டன என்றும், மாற்று கட்சிகளில் இருந்து வரும் தொண்டர்களைத் தவெக என்றும் இன்முகத்தோடு வரவேற்கும் என்றும் மேடையில் முழங்கியுள்ளார்.
திமுகவின் பொய் பிரச்சாரங்களைச் சாடிய ஆதவ் அர்ஜுனா, திருமாவளவனுக்கும் தவெக-விற்கும் சண்டை இருப்பது போலச் செயற்கையாக உருவாக்குவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். “விசிக-வால் தவெக-விற்கு எந்த ஆபத்தும் வராது என்றும், எங்களுடைய முழு ஆதரவு தவெக-விற்கு இருக்கும் என்றும் திருமாவளவனே என்னிடம் கூறினார்” என்று ரகசியத்தை உடைத்துள்ளார்.
ஆட்சிக்கு ஆபத்து வரும் என்று பயந்து விஜய் அமைச்சரவையை உருவாக்கவில்லை என்றும், நாளைக்கே தேர்தல் வந்தாலும் தனியாக நிற்கத் தவெக தயாராக உள்ளதாகவும் சவால் விட்டுள்ளார். வெறும் 30 நாள் ஆட்சியில், 30 வருடங்களாக திமுக செய்யாத சாதனைகளை விஜய் செய்து காட்டியுள்ளார் என்று ஆதவ் அர்ஜுனா பேசிய இந்த காரசாரமான வீடியோ தற்போது இணையத்தை உலுக்கி வருகிறது.
