ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் சொந்தக் காரணங்களுக்காக வங்கதேச டி20 தொடரிலிருந்து திடீரென விலகியுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக டெல்லியில் பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளி ஆல்ரவுண்டரான 30 வயது நிகில் சௌத்ரியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தங்களது தேசிய அணியில் அதிரடியாகச் சேர்த்துள்ளது.

இதன் மூலம் கடந்த 60 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா ஆண்கள் கிரிக்கெட் அணிக்காக விளையாடத் தேர்வாகியுள்ள மிக அரிய இந்திய வம்சாவளி வீரர் என்ற மாபெரும் வரலாற்றுப் பெருமையை நிகில் சௌத்ரி பெறுகிறார். ஆரம்பத்தில் இந்தியாவில் பஞ்சாப் மாநில அணிக்காக ஹர்பஜன் சிங், சுப்மன் கில் ஆகியோருடன் இணைந்து விளையாடிய இவர், கொரோனா லாக்டவுன் நேரத்தில் தற்செயலாக ஆஸ்திரேலியாவில் உள்ள தனது மாமா வீட்டிற்குச் சென்றபோது எல்லைகள் மூடப்பட்டதால் அங்கேயே தங்கி தனது கிரிக்கெட் கனவைத் தொடர ஆரம்பித்தார்.

ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் (BBL) தொடரில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாடி தனது அசாத்திய ஆல்ரவுண்ட் திறமையால் ஆஸ்திரேலிய தேர்வுக்குழுவை மிரளவைத்த இவர், நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியிலும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பெல்ஜியத்தில் விளையாடி வரும் நிகில் சௌத்ரி, வெள்ளிக்கிழமை அன்று டாக்கா நகரில் ஆஸ்திரேலிய அணியுடன் இணையவுள்ள நிலையில், ஜூன் 17 முதல் சட்டோகிராமில் தொடங்கவுள்ள வங்கதேசத்திற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆரோன் ஹார்டி, ஜோயல் டேவிஸ் ஆகியோருடன் மிடில் ஆர்டர் இடத்திற்காகப் போட்டி போடவுள்ளார்;

இவரின் இந்த அசுர வளர்ச்சி ஒட்டுமொத்த இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தற்போது பயங்கர ட்ரெண்டாகி வாழ்த்துகளைக் குவித்து வருகிறது.