சென்னை மாவட்டத்தில் உள்ள எர்ணாவூர் காமராஜர் நகர் பகுதியில் பட்டதாரியான ஷாலினி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவடி அருகில் இருக்கும் அழகு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ஷாலினி மின்சார ரயிலில் திருவொற்றியூர் வின்கோ நகர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கியுள்ளார். இதனையடுத்து தனது அண்ணனுடன் செல்போனில் பேசி கொண்டே தண்டவாளத்தின் ஓரமாக ஷாலினி நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு ஷாலினி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதற்கிடையில் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் சந்தேகத்தில் ஷாலினியின் அண்ணன் குடும்பத்தினருடன் வின்கோ நகர் ரயில் நிலையத்திற்கு சென்று தனது தங்கையை தேடி பார்த்துள்ளார். அப்போது உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தனது தங்கையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாலினி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.