உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் லக்னோ டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற ஒரு கோர விபத்து மிகப்பெரிய கடத்தல் கும்பலின் சதியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையோரம் நின்றிருந்த டேங்கர் லாரியின் மீது மோதியதில் காரில் பயணம் செய்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்துக்குள்ளான அந்த வாகனத்தைச் சோதனையிட்ட காவல்துறையினர் உள்ளே பலத்த காயங்களுடன் 2 சிறுவர்கள் மயக்க நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் காரில் இருந்து ஒரு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அந்தச் சிறுவர்கள் குருகிராம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் கடத்தப்பட்டதும் தெரியவந்தது.

கடத்தல்காரர்கள் உயிரிழந்ததால் இந்த விபத்து அந்தச் சிறுவர்களின் உயிரைக் காப்பாற்றும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. குருகிராம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான மனோஜ் மற்றும் அவரது இரண்டு மகன்களையும் ஒரு கும்பல் கடத்திச் சென்றுள்ளது.

மனோஜை ஒரு வீட்டில் சிறைவைத்துவிட்டு அவரது குழந்தைகளை மட்டும் இந்த காரில் கடத்தல்காரர்கள் கொண்டு சென்றுள்ளனர். விபத்தில் தப்பித்த ஒரு குற்றவாளியிடம் நடத்திய விசாரணையில் குடும்பப் பகை காரணமாக மனோஜைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தது அம்பலமானது.

காவல்துறையினர் உடனடியாகச் செயல்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த மனோஜை பத்திரமாக மீட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாகக் காயமடைந்த கடத்தல்காரன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல் குறித்து ஏற்கனவே குருகிராம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரு மாநில காவல்துறையினரும் இணைந்து இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.