கொல்கத்தா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தப்போவதாக விடுத்த மிரட்டல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நதியா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டால் கொல்கத்தா இலக்காக்கப்படும் என்று அச்சுறுத்தியதைச் சுட்டிக்காட்டினார்.

மேலும் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும் பிரதமர், இத்தகைய தீவிரமான அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட பின்னரும் அதுகுறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனம் சாதிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். நாட்டின் பாதுகாப்பில் அக்கறை காட்டாத பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் ஆவேசமாக வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் குறித்து மேலும் பேசிய மம்தா பானர்ஜி, பாஜக தலைவர்கள் தேர்தலுக்காக மேற்கு வங்க மக்களைச் சாடி வருவதாகவும், ஆனால் வெளிநாட்டிலிருந்து வரும் மிரட்டல்களை எதிர்கொள்ளத் தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியும் இதே கருத்தை முன்னிறுத்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரின் மௌனத்தை விமர்சித்தார்.