பிரிட்டனின் தலைநகர் லண்டனில் தனது மொபைலை திருட முயன்ற குற்றவாளியை தைரியமாக சமாளித்த சவுதி அரேபிய இளைஞரின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகியுள்ளது. சாஉத் பின் ஹரியுல் அல் சுபாயி எனும் அந்த இளைஞர், தெருவில் நடந்த திருட்டு முயற்சியை நேரில் எதிர்கொண்டு, திருடனை தரையில் தள்ளி கட்டுக்குள் வைத்தார்.

அவரின் கைபிடி முற்றிலும் ரெஸ்லிங் பிடிபோல இருந்ததால் குற்றவாளி தப்ப  முடியாமல் இருந்தார். சம்பவத்தின் போது அந்த இளைஞர் திருடனை கண்டித்ததோடு மட்டுமின்றி, கழுத்தை உறுதியாக பிடித்து தப்பிச் செல்லவே அனுமதிக்கவில்லை. அருகில் இருந்த சிலர் நடுவே புகுந்து குற்றவாளியை காப்பாற்ற முயன்றாலும், சவுதி இளைஞர் தனது கட்டுப்பாட்டை தொடர்ந்தார்.

லண்டனில் இந்த வகை ‘பறிப்பு திருட்டுகள்’ (Snatch Theft) பெரிதும் அதிகரித்து வருகிறது. கடந்த வருடம் மட்டும் 78,000க்கும் மேற்பட்ட மக்கள் மொபைல் போன்கள் அல்லது கைப்பைகள் பறிக்கபட்டுள்ளதாக போலீஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த திருட்டுகள் பெரும்பாலும் இருசக்கர வாகனங்களில் இருக்கும் நபர்களால் நடைபெறும்.

இதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, பிரிட்டன் அரசு, பொதுமக்கள் தங்களுடைய மொபைல்களில் தனிப்பட்ட QR குறியீடுகளை பதித்து, பாதுகாப்பான தரவுத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இது போல “Phone Marking” திட்டங்கள், திருடிய போன்களை மீட்பதிலும், பொதுமக்கள் விழிப்புணர்வை அதிகரிப்பதிலும் முக்கிய பங்காற்றும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.