மும்பை லோக்கல் இரயிலில் கோச் கதவை மூடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், 22 வயதான மயங்க் லோஹர் என்ற இளைஞர் சக பயணியால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சேல்ஸ்மேனாகப் பணிபுரிந்து வந்த மயங்க், கடந்த ஜூன் 23 அன்று இரவு சர்ச்கேட்டில் இருந்து நல்லாசோபாரா செல்லும் விரைவு இரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது பலத்த மழை பெய்ததால், முதலாம் வகுப்பு பெட்டியின் கதவை மூடுமாறு மயங்க் கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில், ரோஷன் சுவர்ணா என்ற பயணி மயங்கின் வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு, இரயில் போரிவலி நிலையத்தை அடைவதற்குள் கீழே குதித்துத் தப்பியோடியுள்ளார். படுகாயமடைந்த மயங்க் காந்திவிலி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

​இந்த நிலையில், விரார் மேற்கு மயானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மயங்கின் இறுதிச்சடங்கில், அவரது தந்தை ரமேஷ் லோஹர் மகனின் உடலைப் பார்த்து நெஞ்சை உடைத்து அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பலரையும் கலங்க வைத்துள்ளது. மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மயங்கின் தந்தையைத் தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறியபோது, கொலையாளிக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என தந்தை கோரிக்கை வைத்தார்.

மேலும், மயங்கின் அண்ணன் மெகுல் லோஹர் வெளியிட்ட வீடியோவில், கொலையாளியைத் தூக்கிலிட வேண்டும் அல்லது போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்ல வேண்டும் என ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார். இதற்கிடையே, 400-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த இரயில்வே போலீசார், தலைமறைவாக இருந்த 30 வயது கொலையாளி ரோஷன் சுவர்ணாவை பான்வெல் பகுதியில் வச்சு அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.