மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தின் பிசி பைபாஸ் சாலையில், பெற்றோரின் கடுமையான குடிப்போதை காரணமாக 4 மாத பச்சிளம் குழந்தை ஒன்று ஓடும் பைக்கில் இருந்து நடுரோட்டில் விழுந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வேதனையான விஷயம் என்னவென்றால், குழந்தை பைக்கில் இருந்து கீழே விழுந்தது கூட தெரியாமல் அந்த தம்பதியினர் போதையில் வண்டியை ஓட்டிச் சென்றுள்ளனர்.
அதாவது மோட்டார் சைக்கிளில் சென்ற புல்சந்த் ராவத் மற்றும் மீரா ராவத் ஆகிய தம்பதியினர், தங்களின் இரண்டரை வயது குழந்தை மற்றும் 4 மாத குழந்தையுடன் சென்றுள்ளனர். கணவன், மனைவி இருவருமே மதுபோதையில் இருந்ததால், தாயின் கையில் இருந்த 4 மாத குழந்தை எதிர்பாராதவிதமாகச் சாலையில் தவறி விழுந்துள்ளது.
ஆனால், போதை தலைக்கேறியிருந்த அந்த தம்பதிக்குக் குழந்தை விழுந்தது தெரியாமல், மேலும் 700 மீட்டர் தூரம் வண்டியை ஓட்டிச் சென்றுள்ளனர். அங்கு அவர்களின் பைக் நிலைதடுமாறி கீழே விழுந்த பிறகும், குழந்தை பின்னால் விடுபட்டதை அவர்கள் உணரவில்லை. பைக் விபத்திற்குப் பின், அந்த தம்பதியினர் போதை மயக்கத்திலேயே சாலையோரமாகக் கிடந்துள்ளனர். அந்த தேசிய நெடுஞ்சால வழியே சென்ற பொதுமக்கள், நடுரோட்டில் குழந்தை தனியாகக் கிடப்பதைக் கண்டு உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் அதிகாரிகள், குழந்தையை மீட்டு உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்ததைத் தொடர்ந்து குழந்தையின் நிலைமை சீரானது. பெற்றோரின் இந்த பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான நடத்தைக் குறித்து அப்பகுதி மக்கள் கடும் ஆத்திரத்தையும், குழந்தையைத் தக்க சமயத்தில் மீட்ட போலீசாருக்குத் தங்களது பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
