ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த 17 வயது மாணவி, இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அந்த மாணவி, நீட் பயிற்சிக்காக சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு கோட்டாவுக்கு வந்திருந்ததாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை காலை இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.
இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவி, முதலில் 11 கே.வி. மின்கம்பியில் மோதியுள்ளார். அதன்பின்னர் மின்கம்பியில் இருந்து கீழே விழுந்துள்ளார். மின்கம்பி உடைந்தபோதிலும், அதிர்ஷ்டவசமாக மாணவி மின்சாரம் தாக்காமல் உயிர் தப்பியுள்ளார். இந்த விபத்தில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன், உடலின் சில பகுதிகளிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மாணவி தவறி கீழே விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களிடமும் போலீசார் தகவல்களை சேகரித்துள்ளனர்.
காயமடைந்த மாணவி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டாவில் மாணவர்கள் தங்கும் பகுதிகளின் பாதுகாப்பு தொடர்பாக இந்த சம்பவம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. சம்பவத்துக்கான முழுமையான காரணம் போலீஸ் விசாரணை முடிந்த பிறகே தெரியவரும்.
