ராஜஸ்தான் மாநிலம் தௌல்பூர் மாவட்டம் சர்மதுரா பகுதியில் உள்ள புகழ்பெற்ற தமோஹ் அருவியை பார்க்க சுமார் 70 முதல் 100 இளைஞர்கள் சென்றுள்ளனர். அருவியை பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது, திடீரென பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தண்ணீரின் வேகம் பலமடங்கு அதிகரித்து, அவர்கள் திரும்பிச் செல்லும் பாதையும் நீரில் மூழ்கியது. இதையடுத்து இளைஞர்கள் அனைவரும் தண்ணீருக்கு நடுவே சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உள்ளூர் மக்களுடன் இணைந்து SDRF மீட்புக் குழுவினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தண்ணீரில் சிக்கியவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற கயிறுகள் பயன்படுத்தப்பட்டன. மேலும், டிராக்டர் உதவியுடனும் அவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதிகாரிகளும் சம்பவ இடத்தில் இருந்து மீட்புப் பணிகளை கண்காணித்தனர்.
தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக தமோஹ் அருவியில் நீரின் வேகம் மிகவும் அதிகரித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மழைக்காலங்களில் தமோஹ் அருவி போன்ற நீர்நிலை பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை சீராகும் வரை ஆபத்தான பகுதிகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையின்றி நீர்வரத்து அதிகம் உள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பல மணி நேரம் நடைபெற்ற மீட்புப் பணிகளுக்குப் பிறகு, தண்ணீரில் சிக்கியிருந்த இளைஞர்கள் அனைவரும் இரவு நேரத்தில் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. திடீரென அதிகரித்த நீர்வரத்தால் ஏற்பட்ட இந்த சம்பவம், மழைக்காலங்களில் அருவி மற்றும் நீர்நிலை பகுதிகளுக்குச் செல்லும்போது பொதுமக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.
