இந்தியத் தலைநகர் டெல்லியின் மையப்பகுதியான கனாட் பிளேஸ் வீதியில், வயதான முதியவர் ஒருவர் சாலையோரமாக அமர்ந்து உருக்கமாகப் புல்லாங்குழல் வாசிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. அவரது புல்லாங்குழலில் இருந்து வெளிவரும் ரம்மியமான இசையைக் கேட்டு அந்த வழியே செல்லும் பாதசாரிகள் பலரும் ஆங்காங்கே நின்று அவரை நெகிழ்ச்சியுடன் பார்த்துச் செல்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by VAЯDAN🐉 (@vardanshishodia_music)

இந்த வீடியோவில் அனைவரையும் உருக வைத்த மிக முக்கியமான விஷயம், அந்த முதியவர் தன் அருகில் வைத்துள்ள ஒரு சிறிய போர்டு தான். அதில், “நான் ஒன்றும் பிச்சைக்காரன் இல்லை, எனது இசையின் மூலம் உங்களின் ஆன்மாவைத் தொட மட்டுமே விரும்புகிறேன்” (I am not a beggar, just want to touch your soul with the help of music) என்ற ஆங்கில வாசகம் எழுதப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் ‘vardanshishodia_music’ என்ற கணக்கிலிருந்து பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்த பதிவின் கேப்ஷனில், “இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம்; டெல்லி சிபியில் இந்த அங்கிளிடம் பேசியபோது தான் கலைஞர்களின் பின்னணியில் இருக்கும் நிஜமான கதைகள் எவ்வளவு கணத்தவை என்பது புரிந்தது” என அதைப் பகிர்ந்தவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோவைப் பார்த்து நெகிழ்ந்துபோன நெட்டிசன்கள் பலரும், “உங்களை எண்ணிப் பெருமைப்படுகிறோம் ஐயா” என்று கமெண்ட் செய்து வருவதுடன், டெல்லியில் இல்லாத பிற மாநிலங்களைச் சேர்ந்த பலரும் இந்த முதியவருக்குத் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய விரும்புவதாகவும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.