கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா – பங்களாதேஷ் எல்லை ஒப்பந்தத்தின் போது இந்திய அரசு 111 எல்லைப் பகுதிகளை பங்களாதேஷிற்கு அதிகாரப்பூர்வமாக மாற்றிக் கொடுத்தது. இருப்பினும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க எல்லைப் பகிர்வின் போது ஒரு முக்கிய பகுதி மட்டும் திட்டமிட்டு இந்த பரிமாற்றத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டது. மேற்கு வங்காளத்தின் கூச் பெஹார் மாவட்டத்திற்குள், நாலாபுறமும் இந்திய மண்ணால் சூழப்பட்டு, ஆனால் பங்களாதேஷ் நாட்டிற்குச் சொந்தமான சட்டதிட்டங்களைப் பின்பற்றும் ஒரு விசித்திரமான கிராமமாக இது விளங்கி வருகிறது.

‘தஹாகிராம்-அங்கர்போதா’  அழைக்கப்படும் சுமார் 18.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த பங்களாதேஷ் கிராமத்தில், 20,000-க்கும் மேற்பட்ட பங்களாதேஷ் குடிமக்கள் வசித்து வருகின்றனர். இந்திய நிலப்பரப்பிற்குள் இருந்தாலும், இங்குள்ள மக்கள் பங்களாதேஷ் கரன்சியான ‘டாக்கா’வைத்தான் பயன்படுத்துகின்றனர்; மேலும் இங்குள்ள பள்ளிகள், மருத்துவமனைகள், அரசு சேவைகள் மற்றும் மொபைல் நெட்வொர்க் உள்ளிட்ட அனைத்தும் பங்களாதேஷ் அரசால் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த 1992-ஆம் ஆண்டிற்கு முன்பு வரை, பங்களாதேஷின் பிரதான நிலப்பரப்பு வெறும் 178 மீட்டர் தொலைவில் இருந்தபோதிலும், அங்கு செல்ல நேரடி வழி இல்லாததால் இந்த கிராம மக்கள் கடுமையான தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். இந்திய அரசின் அனுமதியின்றி அவர்களால் வெளியேற முடியாத நிலை இருந்ததால், இப்பகுதி ஒரு திறந்தவெளி சிறைச்சாலையைப் போலவே ஒப்பிடப்பட்டது. இந்த பிரச்சனைக்குத் தீர்வாக, கடந்த 1974-ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ‘டின் பிகா காரிடார்’ (Tin Bigha Corridor) எனப்படும் 178 மீட்டர் நீளமும் 85 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு குறுகிய நிலப்பகுதியை பங்களாதேஷிற்கு இந்தியா குத்தகைக்கு வழங்கியது.

ஆரம்பத்தில் இந்த பாதை ஒரு நாளைக்கு 12 மணி நேரம் மட்டுமே திறக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 24 மணி நேரமும் திறந்திருக்க இந்தியா அனுமதி அளித்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக சாதாரண இந்தியர்களோ அல்லது சுற்றுலாப் பயணிகளோ இந்த பகுதிக்குள் நேரடியாகச் செல்ல அனுமதி இல்லை என்பதுடன், சிறப்பு அனுமதிகள் அல்லது பாஸ்போர்ட் சரிபார்ப்பிற்குப் பிறகே இங்குச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.