மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் சதானா தாலுகாவில் உள்ள அரை (Arai) கிராமத்தில், கடந்த சில நாட்களாகப் பேய் நடமாட்டம் இருப்பதாகப் பரவிய தகவலால் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்தனர். சமூக வலைதளங்களான வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில், உருவம் தெரியாத மர்ம மனிதர்கள் வெற்று நிலங்களிலும், மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும் உலாவுவது போன்ற புகைப்படங்களும், வீடியோக்களும் காட்டுத்தீயாகப் பரவின.
இதனால் பயந்துபோன கிராம மக்கள், சூரியன் மறைந்தாலே வீட்டை விட்டு வெளியே வர அஞ்சினர். ஆனால், இந்த வதந்தியின் உண்மையை அறியத் துணிச்சலுடன் களமிறங்கிய கிராமத்து இளைஞர்கள் மற்றும் போலீசார், நள்ளிரவில் அந்தப் பகுதிகளில் அதிரடி ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
பல மணி நேரம் காத்திருந்தும் எந்த ஒரு மர்ம நடமாட்டமும் தென்படவில்லை. இறுதியில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், வைரலான புகைப்படங்கள் அனைத்தும் ‘ஏஐ’ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என்பதும், வீடியோக்கள் வேறு எங்கோ எடுக்கப்பட்ட பழைய காட்சிகள் என்பதும் அம்பலமானது.
திட்டமிட்டு சமூகத்தில் பீதியை உருவாக்கத் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தியதைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, இது போன்ற பொய்யான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது சைபர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.
