உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பவானிபூர் கிராமத்தைச் சேர்ந்த தீரேந்திர குமார் (25) என்ற வெல்டர், வேலை முடிந்து வீடு திரும்பும்போது நேர்ந்த விபத்து ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் ரூரா-ஷிவாலி சாலையில் பைக்கில் சென்றபோது, தெருவிளக்குகள் இல்லாததால் கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோரம் இருந்த ஆழமான சேறு நிறைந்த பள்ளத்தில் விழுந்தது. அந்தச் சேறு புதைமணல் (Quicksand) போலச் செயல்பட்டதால், தீரேந்திர குமார் அதிலிருந்து வெளியே வர முடியாமல் பைக்கோடு உள்ளே சிக்கிக்கொண்டார்.

​சுமார் 10 டிகிரி செல்சியஸ் கடும் குளிரில், விடிய விடிய 12 மணிநேரம் அந்தச் சேற்றிலேயே அவர் உயிருக்குப் போராடியுள்ளார். மறுநாள் காலை 6 மணியளவில் அந்த வழியாகச் சென்ற விவசாயிகள், சேற்றில் சிக்கிக்கிடந்த அவரைப் பார்த்து மீட்டனர். உடல் முழுவதும் சேறு அப்பிய நிலையில் வலியால் துடித்த அவருக்கு, விவசாயிகள் தண்ணீர் ஊற்றிக் குளிப்பாட்டி, குளிர் காய வைக்கத் தீ மூட்டி முதலுதவி செய்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முறையான தெருவிளக்குகள் இல்லாததும், சாலையோரப் பள்ளங்களைச் சரியாக மூடாத அதிகாரிகளின் அலட்சியமுமே இந்த இளைஞரின் மரணத்திற்குத் தார்மீகக் காரணம் என மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.