சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு மண்ணடி தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (50). இவர் அப்பகுதியில் வாடகை வீடு வசித்து வந்துள்ளார். இவர் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார்.
அதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோயம்பேடு பூ மார்க்கெட்க்கு பூ வாங்குவதற்காக தனலட்சுமி சென்றுள்ளார். அங்கு 100 அடி சாலையில் நடந்து சென்ற போது கால் இடறி எதிர்ப்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார். அதில் தலையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் வீட்டிற்கு வந்த அவர் வியாபாரத்திற்கு செல்லாமல் வீட்டில் ஓய்வெடுத்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இரண்டு நாட்களாக வீட்டை விட்டு தனலட்சுமி வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுப் பெண் தனலட்சுமி வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது தனலட்சுமி நிர்வாணமாக இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உடனே அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் காவல்துறையினர் தனலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பக்கம் அரசர மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையின் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனலட்சுமி தலையில் அடிபட்டதால் உயிரிழந்தாரா? அல்லது யாரேனும் அடித்துக் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனையின் முடிவுக்கு பின்னரே கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து அறிய முடியும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
